Wednesday, February 16, 2005

வாழ்வு

எத்தனை முறை நான் இறந்திருக்கிறேன்?
எனக்கு ஞாபகமில்லை
எத்தனையோ முறையாக இருக்கலாம்
எனது மரணம் பற்றிய விருப்பு
என்னிடத்தில் இல்லை
குறிப்பாக
யாரிடத்திலுமுள்ளதாகவும்
தெரியவில்லை
நண்பர் கோபக்காரர்
உறவினர்
தெரிந்தவர் தெரியாதவர் என
யாராவது ஒருவர்
திடீரென
வலுக்கட்டாயமாக
மரணத்தை
என்மீது திணித்துவிட்டுப்
போய்விடுகிறார்கள்
இப்போதும்
என் ஆன்மா
மெல்ல... மெல்ல இறந்தபடி
எனினும்
ஒவ்வொரு கணமும்
உயிர்த்தெழும் நம்பிக்கையும்
விருப்பும் நிறைந்த
மனது.
?
நவம்பர் 24 1992

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நீண்டு தொங்கும் வெப்ப இரவு

நீண்டு தொங்கும்
வெப்ப இரவு
பூச்சிகளை
முக்கிக் கனக்க வைக்கிறது
காற்றுச் சிணுங்கலில்
பக்கத்து வீட்டு ரேடியோவின்
சின்ன அலறல்
கனமிக்க கைப்பிடியில்
நொறுங்குகிறது உடல்
வியர்வை பொங்கி வழிய
அழுத்தல்
வருத்தல்
முத்தமிடல் கூட ஆவேசமாய்
அவன் தனது பேனாவால்
தாள்களில் கிறுக்குவதுபோல
தனக்குரிய சீப்பால்
தலையை அழுத்தி வாரிக் கொள்வது போல
தாடியைச் சீவுகிற சவரக் கத்தியை
கவனமாகக் கையாள்வதைப் போல
எல்லாம் முடிந்து
அமைதியாய்த் தூங்குகிறான் அருகே
என் இத்தனை நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின்முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே

16. 03. 95

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சத்தங்களனைத்தையும்
விடாது மென்று
உப்பிய வயிறு கொள்ளும்
பகற்பொழுதுகள் அருமையாளவை
அதன் வெளிப்படைத் தன்மை
போற்றத்தக்கது
சாம்பல் நிறத்திற்குட்டவையனைத்தும்
சஞ்சலங்களை மட்டுமே குறிப்பதாகலாம்
சாவை தவிர்க்க முடியவில்லை
இரவானால்
மூச்சு நின்று விடுகிறது
இறுகப்பூட்டப்படும் கதவுகளுள்
என்னமாய் வியர்த்துப் போகிறது
காற்று
மூத்திரப்பை நிரம்ப
முழித்திருந்து கவிதைகள் படித்த காலம்
இனி
ஒரு போதுமே
வாசித்து முடியாது போலும்
சிறு அசைவுகளைக் கூட
காணப் பொறாது
சிடுசிடுக்கிறாள் அம்மம்மாக் கிழவி
நித்திரை வராத நேரங்களெல்லாம்
நிலவு நாட்களைப் பற்றிய
நினைவுகளில் கழிகிறது
இன்று -
அருகிருந்தணைத்து
முலை பற்றும் கணவன் பிடியிலும்
உயிர்ப்பில்லையென.

03. 09. 96

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காற்றிடையுதிரும் இறுகுகளென
சலிப்புற்ற மனதிலிருந்து
பீரிட்டெழும் பிரார்த்தனைகள்
நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை...
கனவுகள் கருணையற்றவை
ஒருபோதுமவை எனக்கு
இரக்கம் காண்பிப்பதில்லை
இதயத்தின் இடுக்குகளில்
எஞ்சியவற்றைக்கூட
சீழ் மூடி விடுகிறது
காலம்
வடுக்களை
முகத்தில் விட்டெறியும் போதெல்லாம்
நான்
மௌனமாக
பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருப்பேன்
பெரிய கோயிலின் துருவேறிய மணிக்கூண்டு
அழும்போது
இலைப் பறவைகள் தூங்கும்போது
மிகவும் சஞ்சலமடைகிறேன்
மாலை நேரங்கள் துயருடன் கழிகின்றன
இரவுகளில் ஓயாது புலம்புகிறது மழை
திறந்து வைத்த மரக்கதவுகளில்
ஓங்கியழுகிறது காற்று
கொட்டும் பெருமழையில்
காற்றலையும் வெளியில்
அறுந்து போன
இழைகளைப் பொருத்தி
உனக்கான துயர் கீதத்தை
எப்படி இசைப்பேன் நான்.

16. 03. 95

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது