Wednesday, June 22, 2005


புராதனக் கோட்டைகளையும்
இடிபாடுகளையும் மேவிச் செல்கிறது
ஒரு துயரமான கண்ணீர்த் துளி
"வந்து விடு"
கண்மூடி இறைஞ்சுகிறாள்
இதழ்கள் பிளந்துருகும்
முத்தத்தின் ஈரம்
எனக்கும் உனக்குமே பரிச்சயம்கொண்ட
பேரமைதி பெருகும் நீர்த் தடங்களிற்கு
அழைத்துச் செல்கிறது
ஒளியும் வர்ணங்களுமற்றது
என் உலகம்
வர்ணப்பூச்சிகளிற்கு
வாசனை மலர்களிற்கு
பரிச்சயமற்றதும் என் உலகம்.
குருதியும் தசையும்
என்புகளும் உருகி
உயிர்ப்பும் மூப்பும் வனப்பும்
ஒருங்கிசைவது.
"வந்துவிடு"
ஆழமான நீர்த்தடங்களிலிருந்தும்
வழுவி
உறையாது ஒளிர்கிறது கண்ணீர்
முலைகளும் இதழ்களாலும்
பேணப்படுகிற உலகைக் காண
குழந்தை தயாராகிவிடுகிறது
~


காலம் june 2005, இதழ் 24
படம் இங்கிருந்து:

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.



வ்வொரு நாளும்
ஏதோ ஒரு இழப்பு
கைகளிலும் கால்களிலும்
மனங்களில் உழல்பவையின்
எச்சங்கள் பொருக்குகள்
கருணையேதுமற்று
குரல்வளை நொருக்கத்
தயாராகிவிடுகிறாய் நீ
இருளில்
வசீகரமும் வன்மமுமாய் ஒளிர்கின்றன
கண்கள்
தலையணைகளில்
நுரைத்தொழுகும்
எச்சில்
அளவளாவுவது
அன்பு கொள்வது
ஏதுமில்லை
பிடரிவழி தீசுக்கள் கழன்றொழுக
பேசுவது யாதென்ற
புரிதலுமில்லை
உரசிக் கொள்ளும் முதுகுகளின் முன்
எனக்கும் உனக்குமான
தனித்தனி உலகங்களில்
தவித்துப் போய்விடுகிறோம்
நாம்.
~


காலம் june 2005
படம் இங்கிருந்து

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது